search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள் ஆலோசனை"

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார். #EdappadiPalaniswami
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த மாதம் 2-ந் தேதி மரணமடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது.

    இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

    சுவர் விளம்பரங்கள் தொகுதி முழுவதும் வரையப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்தி பொதுமக்களிடம் அரசியல் கட்சிகள் ஆதரவு திரட்டி வருகின்றன.

    அ.தி.மு.க.வினர் பூத் கமிட்டி அமைத்து விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு போட்டியாக அ.ம.மு.க.வினரும் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளன.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    மதுரை ரிங்ரோடு, வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறும் வகையில் உழைப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணியினர்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து தொண்டர்களுக்கு விளக்கினர்.

    முன்னதாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

    வருகிற 11-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். #EdappadiPalaniswami
    ×